பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனன் இத்தலத்தில் தவம் செய்துக் கொண்டிருந்தபோது, சிவபெருமான் அவருக்கு வேடன் வடிவில் காட்சி கொடுத்ததால் இப்பகுதி 'வேட்டக்குடி' என்று பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'திருமேனியழகர்' பெரிய வடிவ லிங்க மூர்த்தியாக சற்று உயரமான பாணத்துடன் காட்சி தருகின்றார். 'சுந்தரேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பிகை 'சாந்த நாயகி' என்றும் 'சௌந்தர்ய நாயகி' என்றும் வணங்கப்படுகின்றாள். அம்பாள் சிறிய வடிவம்.
பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், புன்னைவன நாதர், சம்பந்தர், சனீஸ்வரன், மகாலட்சுமி, ஐயனார், நவக்கிரகங்கள், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகிய சன்னதிகள் உள்ளன.
அர்ஜீனனுக்குக் காட்சி தந்த வேடுவர், வேடுவச்சி உற்சவ மூர்த்திகள் கையில் வில், சூலம் ஏந்தி காட்சி தருகின்றனர்.
மாசி மகத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீர்த்தவாரி கொடுக்க அருகில் உள்ள கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுவார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|